3 வயது குழந்தையை கொடூரமாக கொன்றதால் ஆயுள் தண்டனை பெற்ற பூவரசி: முன்கூட்டியே விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: தம்மை திருமணம் செய்ய மறுத்த ஆண் நண்பரின் 3 வயது குழந்தையை கடத்திக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பூவரசியை முன்கூட்டியே விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்ய மறுத்த ஆண் நண்பரின் மூன்றரை வயது குழந்தையை கடத்திச் சென்று, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததுடன், உடலை சூட்கேசில் அடைத்து பேருந்தில் விட்டுச் சென்றதாக தொடரப்பட்ட வழக்கில், பூவரசி என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் 2011ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில், மறைந்த முதல்வர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு 2021ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், பூவரசியை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி, அவரது கணவர் மணிகண்டன் அரசுக்கு மனு அளித்துள்ளார். கொடுங்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்த விண்ணப்பத்தை அரசு நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மணிகண்டன் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. மணிகண்டன் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.மனோகரன், தமிழக அரசு உத்தரவின்படி 10 ஆண்டுகள் தண்டனையை பூர்த்தி செய்த பூவரசியை முன்கூட்டி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பூவரசியின் நடத்தை குறித்து அறிக்கை அளிக்கும்படி நன்னடத்தை அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி நன்னடத்தை அதிகாரி அளித்த அறிக்கையில், பூவரசியை முன்கூட்டியே விடுதலை செய்வதால் அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பூவரசி செய்த தவறுக்காக வருந்தியிருப்பார். சமுதாயத்தில் மீண்டும் இணைந்து அமைதியான வாழ்க்கையை தொடர வேண்டும் என்ற அடிப்படையில், அரசு உத்தரவின்படி 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த அவரை உடனடியாக முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

x