விருதுநகர்: பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவ்விவகாரத்தில் தனது மனைவியிடம் விசாரணை நடத்த வேண்டும் என சிறுமியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி ஒருவர், கடந்த 2010ல் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண், ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் மனைவியை தாக்கியதாக பட்டாசு தொழிலாளி கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வசிக்கின்றனர். இத்தம்பதியினரின் 8 வயது மகளும், 2 வயது ஆண் குழந்தையும் தாயுடன் வசிக்கின்றனர். இதனால், அவ்வப்போது குழந்தைகளை மட்டும் தந்தை பார்த்து வந்துள்ளார்.
அந்த வகையில் கடந்த மாதம் 9-ம் தேதி தந்தை தனது மகளை பார்க்க வந்தபோது, மகளுக்கு உடல்நலம் பாதித்து இருப்பது தெரிந்தது. உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்து மகளை அருகில் இருந்து கவனித்துள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். மேலும், அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், சாத்தூர் மகளிர் போலீஸார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மதுரையில் சிறுமியின் தந்தை கூறுகையில், ‘‘எனது மகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை. அவர் பேசக்கூட முடியாத நிலையில், ஆபத்தை நோக்கி உள்ளார். எனது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விவாகரத்தில் எனது மனைவி மீதும் சந்தேகம் உள்ளது. அவரிடமும் உரிய விசாரணை நடத்தவேண்டும்’’ என்றார்.