கடற்படை வளாக பள்ளியில் மோதல்: 9-ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள விஜயநாராயணத்தில் உள்ள இந்திய கடற்படை வளாகத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடற்படை வளாக ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.

இந்நிலையில், இங்கு 9-வதுவகுப்பு பயிலும் மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது சாப்பாட்டுப் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து,தண்ணீர் குடித்துள்ளார். அப்போது, நாங்குநேரியைச் சேர்ந்த சகமாணவர் மீது தண்ணீர் சிந்தியதாகவும், இது தொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு,முன்விரோதம் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர் நேற்று தனது வீட்டில் இருந்து சிறிய அரிவாளை பள்ளிக்கு எடுத்து வந்து, தன் மீது தண்ணீர் சிந்தியசக மாணவரின் தலையில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காயமடைந்த மாணவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

கல்லூரி மாணவருக்கு வெட்டு: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில், வல்லநாடு பகுதியைச் சேர்ந்த முத்து என்பவரது மகன் மாரிசெல்வம் (20), இரண்டாமாண்டு பிபிஏ பயின்று வருகிறார். இந்நிலையில், கல்லூரிக்குள் நேற்று மதியம் நுழைந்த 4 பேர் கும்பல், மாரிசெல்வத்தை அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டது. காயமடைந்த மாரிசெல்வம், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் நடத்திய விசாரணையில், அண்மையில் கோயில் விழாவின்போது நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தில், இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் மாட்டு வண்டிகளுக்கு குறுக்காகச் சென்றுள்ளனர். இதை மாரிசெல்வம் கண்டித்துள்ளார். இந்த முன்விரோதத்தில் அவர் அரிவாளால் வெட்டப்பட்டதாகவும், தப்பிய 4 பேரில்ஒருவர் கல்லூரி மாணவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

x