காலி மனைக்கு வரிவிதிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் அதிரடி கைது 


திருச்சி: காலி மனைக்கு வரிவிதிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட துவாக்குடி நகராட்சி பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை கையும் களவுமாகப் பிடித்தனர்.

திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் கதிர்வேல் (60). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்காக வீட்டுமனை ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி கதிர்வேல் 15 நாட்களுக்கு முன்பு துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனிடம் விண்ணப்பித்துள்ளார்.

விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட சௌந்தரபாண்டியன் 15 நாட்கள் கழித்து வருமாறு கூறியுள்ளார். அதன் பேரில் கதிர்வேல் கடந்த 29-ம் தேதி மீண்டும் சௌந்தரபாண்டியனை சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர், ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே உங்களது காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்து தர முடியும் என்றும், காலி மனைக்கான வரியை தனியாக கட்டிவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்ட பில் கலெக்டர் சௌந்தரபாண்டியன்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிர்வேல் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி-யான மணிகண்டனிடம் இது குறித்து புகாரளித்துள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த ஆலோசனையின் பேரில் இன்று காலை 11 மணியளவில் துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் வைத்து சௌந்தரபாண்டியனிடம் கதிர்வேலு ரூ.50 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்னா வெங்கடேஷ், சேவியர் ராணி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். பில் கலெக்டர் வாங்கிய லஞ்சப் பணம் அவருக்கு மட்டுமா அல்லது அத்தொகையில் யார் யாருக்கு எவ்வளவு பணம் பிரித்துக் கொடுக்கிறார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x