பாம்பு பிடிக்க சென்றவர் பாம்பு கடித்து பலியான சோகம்


கோவை: கோவையில் பாம்பு பிடிக்க சென்ற அனுபவம் வாய்ந்த வீரர், பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. தனியார் நிறுவனம்m ஒன்றில் பணியாற்றி வரும் முரளி, பாம்பு பிடிப்பதில் அனுபவம் வாய்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை பிடித்து, வனத்துறை உதவியுடன் வனப்பகுதியில் விடுவித்து வந்தார். சமீபத்தில் கோவை கோவில்மேடு பகுதியில் ஒரு வீட்டின் குளியறையில் பதுங்கியிருந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவீரியன் பாம்பைப் பிடித்து அவர் மீட்டிருந்தார். பையில் இருந்த அந்த பாம்பு அடுத்தடுத்து 40 குட்டிகளை ஈன்றது. அனைத்து பாம்பு குட்டிகளையும் முரளி பத்திரமாக வனப்பகுதியில் விடுவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்படும் வாகன பழுது நீக்கும் கடை ஒன்றிற்குள் பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதாக முரளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கு சென்று பார்த்த போது, அது கட்டுவீரியன் விஷப்பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து, முரளி அந்த பாம்பை பாதுகாப்பு உபகரணங்களுடன் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக சுமார் 3 அடி நீளமிருந்த அந்த பாம்பு, முரளியின் காலில் கடித்தது.

இதனால் முரளியின் காலில் ரத்தம் கொட்டியது. அதையும் பொருட்படுத்தாமல் அந்த பாம்பை பிடித்து, பத்திரமாக சாக்கு ஒன்றில் வைத்து முரளி கட்டியுள்ளார். அவரை பாம்பு கடித்ததை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் முரளி மயங்கி விழுந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவரை சோதித்த போது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி போலீஸார், முரளியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாம்பு பிடிப்பதில் அனுபவம் வாய்ந்தவரே பாம்பு கடித்து உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

x