25 லட்ச ரூபாய் சம்பள வேலையை உதறிய இளைஞர் தற்கொலை: யுபிஎஸ்சி தேர்வால் சோகம்


கான்பூர்: 25 லட்சம் ரூபாய் சம்பளத்திற்கான வேலையை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம் ராவத்பூரியைச் சேர்ந்தவர் குல்தீப் சிங் சோலங்கி(29). இவர் கஸ்கஞ்ச் புஜ்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட சித்பூரில் துளசி விஹாரில் உள்ள பிரின்ஸ் ஆண்கள் விடுதியில் தங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக யுபிஎஸ்சி தேர்வுக்கு குல்தீப் தயாராகி வந்தார்.

முதல்நிலை மற்றும் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், இறுதிப் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் குல்தீப் சிங் சோலாங்கி இருந்துள்ளார். இந்த நிலையில், விரக்தியில் குல்தீப் சிங் விஷம் குடித்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது சிறுவயதில் தந்தையை இழந்த குல்தீப், தனது சகோதரர் சந்தீப் சோலங்கி மற்றும் தாய் விமலா தேவியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2017-ல் பிடெக் படிப்பை முடித்த குல்தீப் சிங்கிற்கு ரூ.25 லட்சத்தில் வேலை கிடைத்தது. இது தவிர வெளிநாடுகளில் இருந்தும் பல வேலைவாய்ப்புகள் வந்தன. ஆனால், அவற்றையெல்லாம் நிராகரித்து விட்டு யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்த அவர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x