குவாரி தண்ணீரில் மூழ்கி பெயிண்டர் உயிரிழப்பு: அதிகாரிகள் அலட்சியத்தால் தொடரும் அவலம்


மதுரை: அதிகாரிகளின் அலட்சியத்தால் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி மனிதர்கள் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அந்த வகையில், இன்று ஒத்தக்கடை அருகே குவாரியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி பெயிண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் கல்குவாரிகள் அதிகளவில் உள்ளது. கருப்பாயூரணி, மேலூர் உள்ளிட்ட சில இடங்களில் செயல்படாத கல்குவாரிகளும் உள்ளன. இவற்றை சுற்றிலும், தடுப்பு வேலிகள் இன்றி, திறந்த வெளியாக கிடப்பதால் விடுமுறை நாளில் கல்குவாரி தண்ணீரில் குளிக்கச் செல்லும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நீச்சல் தெரியாமல் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கருப்பாயூரணி அருகிலுள்ள மஸ்தான்பட்டி கல்குவாரிகளில் பள்ளி மாணவர்கள் சிலர் விடுமுறை நாளில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி இறந்தனர்.

இந்நிலையில், மதுரை ஒத்தகடை யானைமலை அடிவாரப் பகுதியில் பல ஆண்டாக செயல்படாத கல்குவாரியில் மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த பெயிண்டர் மோதிலால் (45) என்பவர் இன்று தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஒத்தக்கடை போலீஸார் விசாரிக்கின்றனர்.

உயிர் பலியை தடுக்கும் விதமாக குவாரியை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். குறிப்பாக, விடுமுறை தினங்களில் மாணவர்கள் நடமாட்டத்தை அப்பகுதியில் போலீஸார் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும் என, அப்பகுதியினர் ஏற்கெனவே கோரிக்கை விடுத்து இருந்தனர். ஒத்தக்கடையைச் சேர்ந்த அப்துல் ஜலால் ரஹ்மான் என்பவரும் மதுரை ஆட்சியர், மதுரை கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு தடுப்பு வேலி அமைக்க வலியுறுத்தி புகார் மனு அனுப்பினார்.

இதன்படி, சம்பந்தப்பட்ட குவாரி பகுதியில் தடுப்பு வேலிகளை அமைக்க, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மண்டலம் - 3) மற்றும் அரும்பனூர் ஊராட்சி செயலர் ஆகியோருக்கு அறிவுறுத்தியும் அலட்சியமாக இருந்ததாகத் தெரிகிறது.

தடுப்புவேலிகள் அமைத்திருந்தால் பெயிண்டர் மோதிலாலின் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம். இனிமேலும், தாமதிக்காமல் குவாரிகளைக் கண்காணித்து தடுப்பு வேலிகள் அமைத்தால் மட்டுமே உயிர் பலிகளை தடுக்கமுடியும்.

x