வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை கர்நாடகாவில் மீட்பு!


வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 3 பேரை பிடித்த போலீஸார் கர்நாடக மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்துக்குள் மீட்டனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சின்னு. கர்ப்பிணியாக இருந்த சின்னு, பிரசவத்திற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாய், சேய் இருவரும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சின்னுவிடம் இருந்து பெண் ஒருவர் குழந்தையை வாங்கியுள்ளார்.

சிறிது நேரத்தில் சின்னு சாப்பிட்டு முடித்து விட்டு பார்த்த போது குழந்தையுடன் அந்த பெண் மாயமானதைக் கண்டு திடுக்கிட்டார். பச்சிளம் ஆண் குழந்தை மாயமானதால் சின்னுவும் அவரது உறவினர்களும் செய்வது அறியாமல் கதறி அழுதனர். இது குறித்து, வேலூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, காவல் ஆய்வாளர் சுபா மற்றும் காவலர்கள் விரைந்து சென்று குழந்தை கடத்தப்பட்டது குறித்து விசாரித்தனர்.

மேலும், மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நீலநிற புடவை அணிந்த பெண் ஒருவர் சுமார் 10 வயதுள்ள சிறுவனுடன் அந்த வார்டில் நடமாடி வருகிறார். அந்த வார்டில் இருந்த பச்சிளம் குழந்தைகளை அவர் கொஞ்சியுள்ளார். பின்னர், சின்னுவிடம் குழந்தையை வாங்கியவர், உடன் வந்த சிறுவனுடன் அவசர அவசரமாக மருத்துவமனையில் இருந்து வெளியே செல்கிறார். வெளியே செல்லும்போது கையில் ஒரு பையுடன் செல்கிறார். எனவே, அந்த பையில் குழந்தையுடன் அவர் சென்றது உறுதியானது.

தொடர்ந்து, வேலூர்- திருவண்ணாமலை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் இடையன்சாத்து வரை அந்த பெண் செல்வது தெரிய வந்தது. அதன் பிறகு அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதையடுத்து, குழந்தையை கடத்திய அந்த பெண்ணை கண்டுபிடிக்க டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் 3 தனிப்படை அமைத்து எஸ்.பி மணிவண்ணன் உத்திரவிட்டார். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், பச்சிளம் ஆண் குழந்தையை கடத்தியவர் வேலூரை அடுத்துள்ள இடையன்சாத்து பகுதியைச் சேர்ந்த வைஜெயந்தி மாலா என்று தெரிய வந்தது.

பின்னர், ஆய்வாளர் சுபா தலைமையிலான போலீஸார் வைஜெயந்தி மாலாவைப் பிடித்து விசாரித்த போது பெங்களூருவைச் சேர்ந்தவர்களிடம் குழந்தையை கொடுத்ததாகவும் அவர்கள் காரில் சென்றதாகவும் வைஜெயந்தி மாலா கூறினார். இந்தத் தகவலை அடுத்து டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படையினர் பெங்களூரு விரைந்தனர்.

அதேநேரம், குழந்தையுடன் சென்ற காரின் பதிவெண்ணை கண்டறிந்து, அந்த கார் எந்தெந்த சுங்கச்சாவடிகளை கடந்து சென்றது என்ற விவரங்களையும் சேகரித்து பெங்களூரு சென்ற தனிப்படையினருக்கு போலீஸார் தகவல் கொடுத்தனர். இந்நிலையில், கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை கர்நாடக மாநிலம் சிக்மங்களூருவில் போலீஸார் இன்று காலை மீட்டனர். குழந்தையைக் கடத்தியதாக இரண்டு பேரையும் பிடித்து வேலூருக்கு அழைத்து வருகின்றனர். அவர்களிடம் குழந்தை எப்படி, யாருக்காக கடத்தப்பட்டது, எவ்வளவு பணம் கைமாறியது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x