தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பாமக முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) முன்னாள் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனையிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக முன்னாள் நகர செயலாளராக இருந்த இவரை கடந்த 2019 பிப்ரவரி 5-ம் தேதி மர்ம கும்பல் ஒன்று வெட்டிப் படுகொலை செய்தது. இவர் அப்பகுதியில் நடைபெற்ற மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்தன் காரணமாக இந்த படுகொலை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குறிஞ்சிமலையைச் சேர்ந்து முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதின் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. அவர்கள் தனியாக வழக்குப் பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் 6 பேர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த கொலை வழக்குத் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) முன்னாள் மாவட்ட செயலாளர் நவாஸ் கான் மற்றும் தேரழுந்தூர் பெருமாள் கோயில் சன்னதி தெருவில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவர் முகமது பைசல் ஆகியோர் வீடுகளில் இன்று காலை சென்னையிலிருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.