தமிழகம் முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ சோதனை!


தஞ்சாவூர் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் கொலை வழக்குத் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக முன்னாள் நகர செயலாளராக இருந்த இவரை கடந்த 2019 பிப்ரவரி 5-ம் தேதி மர்மக்கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. இவர் அப்பகுதியில் நடைபெற்ற மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்தன் காரணமாக இந்த படுகொலை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குறிஞ்சிமலையைச் சேர்ந்து முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதின் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. அவர்கள் தனியாக வழக்குப் பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் 6 பேர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தேரெழுந்தூர், வடகரை ஆகிய இரு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

x