மதுரை: ஒத்தக்கடை பகுதியில் சாலைகளில் செல்லும் பெண்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தும் இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை ஒத்தக்கடை மற்றும் நரசிங்கம் பகுதியில் மன நலம் குன்றியது போன்ற நிலையில் உள்ள இளைஞர் ஒருவர் சில நாட்களாக சாலைகளில் சுற்றித் திரிகிறார். இவருக்கு அப்பகுதி மக்கள் இரக்க மனப்பான்மையில் உணவளிப்பது, டீ வாங்கி கொடுப்பது போன்ற உதவிகளைச் செய்கின்றனர். இந்நிலையில், அந்த இளைஞர் சமீபகாலமாக திடீரென சாலைகளில் செல்லும்போதே வாகனங்களின் கண்ணாடிகளை உடைப்பது, பணம் கேட்பது, பீடி சிகரெட் கேட்பது, கொடுக்காவிட்டால் தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் திடீரென அவர் தனது ஆடைகளை கலைந்துவிட்டு செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது பொதுமக்களுக்கு தொந்தரவாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், இந்த நபர் ஒத்தக்கடை, நரசிங்கம் பகுதியில் உள்ள கடைக்கு வந்த ஒரு பெண்ணை, நேற்று பின் தொடர்ந்து வந்துள்ளார். பின்னர் அந்த பெண் எதிர்பாராத நேரத்தில் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். உடனடியாக அருகில் இருந்த கடைக்காரர் அதைத் தடுக்க முயன்றபோது, அவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞரை ஒத்தக்கடை காவல்துறையினர் அழைத்துச் சென்று உரிய விசாரணை நடத்தி, மனநலம் குன்றியவரா? இல்லை வேறு ஏதேனும் போதைப் பழக்கத்தில் இது போன்று நடந்துகொள்கிறாரா? என்று விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதான பகுதிகளில் அந்த இளைஞர் சுற்றித் திரிவதால், அந்த வழியாக செல்லக்கூடிய மாணவிகளும், குழந்தைகளும் அவரைப் பார்த்து அதிர்ச்சியில் சாலைகளின் நடுவே பயந்து ஓடுகின்றனர். இதனால் அவர்கள் கீழே தவறி விழுவதும், வாகனங்கள் மோதி அவ்வப்போது சிறிய விபத்துகளும் நடப்பதாக அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.