பீகாரில் பத்திரிகையாளர் கொடூரக் கொலை: தூக்கில் தொங்க விடப்பட்ட பயங்கரம்


பீகாரில் பத்திரிகையாளர் கவுரவ் குஷ்வாஹா கொலை செய்யப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள துர்கி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் குஷ்வாஹா. பத்திரிகையாளரான இவர், சாஜன் கரிகார் கிராமத்தில் உள்ள மரத்தில் இன்று காலை தூக்கிடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து சென்று கவுரவ் குஷ்வாஹா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அப்பகுதியில் தடவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். செல்போன், துண்டு மற்றும் ஒரு ஜோடி செருப்புகளை அவர்கள் சேகரித்து தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் மோப்பநாய் கொண்டு அப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

தங்கள் மகன் கவுரவ் குஷ்வாஹா கொலை செய்யப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நேற்று இரவு 11 மணியளவில் தொலைபேசியில் சிலர் குஷ்வாஹாவை அழைத்தனர். இதன்பேரில் வெளியே சென்ற குஷ்வாஹா வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர் மரத்தில் தூக்கில் தொங்குவதாக கூறுகின்றனர். எங்கள் மகனைக் கொலை செய்து மரத்தில் தொங்க விட்டுள்ளனர்" என்று குற்றம் சாட்டினர்.

முசாஃபர்பூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து புகார் அளிப்பவர்கள் குறிவைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஜூன் 25-ம் தேதி, சிவசங்கர் ஜா என்ற பத்திரிகையாளர் அவரது வீட்டின் அருகே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், கவுரவ் குஷ்வாஹா தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பீகாரில் அடுத்தடுத்து பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x