சென்னை: ‘பிரியாணி மேன்’ என்ற பெயரில் ‘யூ-டியூப்’ சேனல் நடத்தி வருபவர் அபிஷேக் ரபி (29). இவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். யூ-டியூபில் பலரை அவதூறாகப் பேசிவேகமாக வளர்ந்தவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது.
சமீபத்தில் கூட செம்மொழி பூங்கா குறித்த ‘ரிவ்யூ’ என்ற பெயரில் மிகவும் ஆபாசமாக விமர்சனம் செய்திருந்தார். மேலும், அப்பூங்கா காதலர்களுக்காகவே அமைக்கப்பட்டது போலவும், அங்கு வருபவர்கள் எல்லை மீறிநடப்பதாகவும் ஆபாசமாக விமர்சித்து இருந்தார். மேலும், செம்மொழி பூங்கா குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில், தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், அபிஷேக் ரபி மீது நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார்.
அதில், ``செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி சைகைகளை வீடியோவில் பதிவு செய்து அதை யூ-டியூபில் பதிவேற்றம் செய்துள்ள பிரியாணி மேன் என்ற அபிசேக் ரபிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து சென்னை தெற்குமண்டல சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.சம்பந்தப்பட்ட வீடியோவையும் பார்த்தனர். இதில், அபிஷேக் ரபி எல்லை மீறியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உட்பட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.