கூடலூர்: நீலகிரி அடுத்த கூடலூர் பகுதியில் உணவுக்காக மரத்தை முறித்த போது மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் காடுகளை விட்டு வெளியேறும் இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிகின்றன. அப்போது யானைகள் தாக்குவதில் குடியிருப்புவாசிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தேவர்சோலை மச்சிக்க்கொல்லை பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்தது. அங்குள்ள பனைமரம் ஒன்றை உணவுக்காக அந்த யானை தள்ளி விட்டு முறிக்க முயற்சி செய்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மின் வயர்கள் மீது அந்த மரம் விழுந்ததால், அந்த மின் கம்பிகள் சாலையில் விழுந்துள்ளன. அந்த மின் கம்பிகள் மீது யானை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
யானையின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மின்வாரிய அதிகாரிகள் உதவியுடன் மின்சாரத்தை துண்டித்து விட்டு யானையின் உடலை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். யானையின் உடல் அருகில் உள்ள வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் அங்கேயே எரியூட்டப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.