போக்சோ வழக்கில் கைதான கேரள இளைஞர் கிருஷ்ணகிரி அருகே தப்பி ஓட்டம்


கிருஷ்ணகிரி: கேரளாவில் போக்சோ வழக்கில் தேடப்பட்ட நபர் ஒருவர் சவுதியில் இருந்து டெல்லி திரும்பினார். அவரை கேரளா போலீஸார் கைது செய்து ஆம்னி பேருந்தில் அழைத்து வரும் வழியில் கிருஷ்ணகிரி அருகே அந்த நபர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பெலும்பாரா அருகே உள்ள வடசேரிக்கரா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் ரவி (28). இவர் மீது பத்தனம்திட்டா சைபர் கிரைம் போலீஸார், கடந்த 2023-ல் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்வதற்காக சச்சின் ரவியை போலீஸார் தேடிவந்த நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். அவர் இந்தியா திரும்பினால் கைது செய்ய வசதியாக, கேரள சைபர் க்ரைம் போலீஸார், விமான நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 18-ம் தேதி காலை சவுதியில் இருந்து, விமானத்தில் சச்சின் ரவி இந்தியா வருவதாக பத்தனம்திட்டா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமானத்தில் டெல்லிக்கு வந்த சச்சின் ரவியை, பத்தனம்திட்டா சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோபின் ஜார்ஜ், காவலர் ராஜேஸ் ஆகியோர் கைது செய்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக, அவரை பெங்களூரு அழைத்து வந்தனர்.

பின்னர், பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு அழைத்துச் செல்வதற்காக, ஆம்னி பேருந்து மூலமாக போலீஸார் சச்சின் ரவியை அழைத்து வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் அருகே அவர்கள் பயணித்த ஆம்னி பேருந்து வந்தபோது, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சச்சின் ரவி கூறியதால், போலீஸார் ஓட்டுநரிடம் கூறி, சாலையோரம் பேருந்தை நிறுத்தச் செய்தனர்.

பேருந்தில் இருந்து கீழே இறங்கிய சச்சின் ரவி, போலீஸாரின் கவனத்தை திசை திருப்பி அங்கிருந்து தப்பியோடினார். இது குறித்து கேரள மாநில சைபர் க்ரைம் போலீஸார் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சச்சின் ரவியை தேடி வருகின்றனர்.

x