சென்னை: தமிழகத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (சென்னைமண்டலம்) மண்டல இயக்குநர் பி.அரவிந்தன் தலைமையிலான போலீஸார் (என்சிபி) தீவிர கண்காணிப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக சென்னை மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, என்சிபி பிரிவுபோலீஸார் கடந்த 24-ம் தேதி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 5.970 கிலோ எடை கொண்ட மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள் இருந்தது.
அதை பறிமுதல் செய்த போலீஸார், போதைப் பொருளை வைத்திருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பைசுல் ரஹ்மான் என்பவரை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில், சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 954 கிராம் போதைப் பொருள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கத்தை நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.
மெத்தம்பேட்டமைன் போதைப் பொருட்களை ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து, சென்னையை சேர்ந்த மன்சூர், ராமநாதபுரத்தை சேர்ந்த இப்ராஹிம் என மேலும் இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மொத்தம் 6.924 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.70 கோடி என என்சிபி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.