போலீஸை கண்டதும் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடி: கால்களில் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதி


கோவை: கோவையில் வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி, போலீஸ் வாகனத்தை கண்டதும் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் படுகாயம் அடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜி மோகன் (30). இவர் மீது வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் இவரை ரவுடிகள் பட்டியலில் போலீஸார் இணைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 28ம் தேதி மாலை மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் (41) என்பவர், சிங்காநல்லூர் அருகே உள்ள என்கே பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சுஜி மோகன், கணேசனிடம் பணத்தை தருமாறு கூறி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். அப்போது தான் மிகப்பெரிய ரவுடி எனவும், தன் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறி மிரட்டல் விடுத்த அவர், பின்னர் கணேசனிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் 450 ரூபாய் ரொக்கப்பணத்தையும் வழிப்பறி செய்துள்ளார். அப்போது கணேசன் உதவிக்கு ஆட்களை அழைத்த போது, சுஜிமோகன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை காட்டூர் போலீஸார் சத்தி சாலையில் உள்ள டெக்ஸ்டூல் பாலத்தின் மீது வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேம்பாலத்தின் மீதிருந்து வாலிபர் ஒருவர் திடீரென கீழே குதிப்பதை கண்ட அவர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். அந்த இளைஞருக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததை அடுத்து அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே அந்த இளைஞர் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையின் போது, அவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுஜி மோகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து காட்டூர் போலீஸாரும், சிங்காநல்லூர் போலீஸாரும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x