ராஜஸ்தானில் சோகம்: குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் குளத்தில் குளித்தபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், தித்வானா மாவட்டத்தில் உள்ளது கெராப் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பூபேஷ், சிவராஜ், விஷால், சாஹில். இவர்கள் 4 பேரும் 12 முதல் 15 வயதை சேர்ந்தவர்கள். இந்நிலையில் நேற்று சிறுவர்கள் 4 பேரும் அப்பகுதியில் உள்ள குளத்துக்கு குளிக்கச் சென்றனர், அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் நீரில் மூழ்கினர்.

இந்நிலையில் சிறுவர்கள், வெகுநேரமாகியும் திரும்பி வராததால், அவர்களது பெற்றோர் தேடத் தொடங்கினர். அப்போது, குளக்கரையில் சிறுவர்களின் காலணிகள் இருந்ததை கண்டனர். இதைத் தொடர்ந்து சிறுவர்கள் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பெற்றோர்களில் சிலர் குளத்தில் குதித்து தேடத் துவங்கினர்.

இரவு 9 மணியளவில் இரண்டு சிறுவர்களின் உடல்களை வெளியே எடுத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின்னர், திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் மற்ற இரண்டு சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து சிறுவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உயிரிழந்த சிறுவர்களின் சடலங்களை கண்டு அவர்களின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.

x