ரூபாய் நோட்டு கட்டுகளுக்குள் வெள்ளை பேப்பர்: தக்காளி வியாபாரியிடம் ரூ.20 லட்சம் மோசடி


கோலார்: தக்காளி வியாபாரிக்கு 20 லட்ச ரூபாய்க்குப் பதில் வெள்ளைத்தாள்களை வைத்து, ஏமாற்றியவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், கோலாரில் உள்ள ஏபிஎம்சி சந்தையில் தக்காளி வியாபாரம் செய்து வருபவர் ஆதித்யா ஷா. இவர் தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார். இவரிடம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி மார்க்கெட்டைச் சேர்ந்த முகேஷ் மூன்று லோடு தக்காளி கேட்டிருந்தார்.

இதற்காக கோலாரில் இருந்து மூன்று லாரிகளில் சிலிகுரி மார்க்கெட்டில் உள்ள முகேஷிற்கு தக்காளியை அனுப்பி வைத்தார். இதற்காக மூன்று லோடு தக்காளி 30 லட்ச ரூபாய்க்கு ஆதித்யா ஷா வாங்கியிருந்தார். அந்தப் பணத்தை பெங்களூருவில் உள்ள சஞ்சய்க்கு அனுப்பி வைப்பதாக முகேஷ் கூறியுள்ளார். அதன்படி கடந்த 15-ம் தேதி பணப்பையுடன் சஞ்சய் ஒயிட் பீல்டு அருகே வந்தார். அதில் 20 லட்ச ரூபாய் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த கவரில் ரூ.500 நோட்டில் இருந்த ஆக்சிஸ் வங்கியின் சீல்களைப் பார்த்த ஆதித்யா ஷா, நம்பி அதை வாங்கிச் சென்றார். இதன்பின் வீட்டில் போய் பார்த்த போது, பணத்திற்குப் பதில் 20 லட்ச ரூபாய்க்கும் வெள்ளை பேப்பர் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து சஞ்சய் மற்றும் முகேஷ் மீது ஒயிட்பீல்டு காவல் நிலையத்தில் ஆதித்யா ஷா புகார் செய்தார். அதில், உண்மையான ரூபாய் நோட்டுக்களுக்கு நடுவில் வெள்ளை பேப்பரை வைத்து ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். இதன் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோலாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x