பெங்களூரு: சுரங்கப்பாதையில் குவியல் குவியலாக கிடந்த ஆணிகளை போக்குவரத்து போலீஸார் அகற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. வாகனங்களின் டயர்களைப் பஞ்சராக்கும் மாஃபியா கும்பல் செய்த செயலா இது என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு தெருக்களில் ஆணிகளை குவியல் குவியலாக வீசி வாகனங்களின் டயர்களை பஞ்சராக்கும் மாஃபியாக்களின் நடமாட்டம் இருப்பதாக சந்தேகம் உள்ளது. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள ஜாலஹள்ளி குவெம்பு சர்க்கிள் சுரங்கப்பாதையில் ஆணி குவியல்களை போலீஸார் நேற்று கண்டுபிடித்தனர். இவற்றை போக்குவரத்து காவலர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பெங்களூருவின் சாலைகளின் நடுவில் ஆணிகளை வீசுவதால் வாகனங்கள் பஞ்சராவதாக வதந்திகள் உலாவின. ஆனால், தற்போது ஆணி குவியல்களை, போக்குவரத்து போலீஸாரே அகற்றியதன் மூலம் இந்த சந்தேகம் உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. பெங்களூரு நகரில் எங்கு பார்த்தாலும் வாகனங்கள் பஞ்சராவதால், அருகில் உள்ள பஞ்சர் கடைகளில் வியாபாரம் அமோகமாக நடக்கிறது.
சாலையில் கிடந்த ஆணிகளை அகற்றிய போக்குவரத்து காவலர்களின் சேவையை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். அத்துடன் பிரச்சினைகளை உருவாக்க ஆணிகளைக் கொட்டும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Bengaluru Cops seen cleaning up road swamped with metal nails.
— Karthik Reddy (@bykarthikreddy) July 28, 2024
They took this up after motorists complained of back to back punctures at the spot. pic.twitter.com/T3rzqdOo5v