பணப் பிரச்சினையில் மகள் குத்திக்கொலை, மனைவி படுகாயம்: கொடூர நபர் தலைமறைவு


புதுடெல்லி: டெல்லியில் பணப் பிரச்சினையால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 22 வயது மகள், தனது தந்தையாலேயே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் தாயும் படுகாயமடைந்தார்.

டெல்லி துவாரகா, நஜப்கர் பகுதியைச் சேர்ந்தவர் அபாஸ் அலி. இவரது மனைவி சுபியா. இத்தம்பதிக்கு 13 மற்றும் 22 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு பணப் பிரச்சினையால் அப்பாஸ் அலிக்கும், சுபியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அப்பாஸ் அலி, தனது மனைவியின் தலையில் கத்தியால் குத்தினார்.

அதனை தடுப்பதற்காக 22 வயது மகளான ரஷ்மினா கட்டூன், குறுக்கே வந்தார். இதனால் ரஷ்மினா கட்டூனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர் நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். இதற்கிடையே அப்பாஸ் அலியின் மற்றொரு மகளான 13 வயது சிறுமி, அண்டை வீட்டாரின் உதவியுடன் இதுகுறித்து நஜப்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மயங்கிக் கிடந்த ரஷ்மினா கட்டூன், படுகாயமடைந்த சுபியா ஆகிய இருவரையும் மீட்டு ஜாஃபர்பூரில் உள்ள ஆர்டிஆர்எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ரஷ்மினா கட்டூன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுபியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அப்பாஸ் அலியை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். குடும்பத் தகராறில் பெற்ற மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x