அதிவேகமாக வந்த குப்பை லாரி மோதி பெங்களூரு ஐ.டி ஊழியர்கள் இருவர் பலி


பெங்களூரு: மாநகராட்சி குப்பை லாரி மோதி ஐ.டி நிறுவன ஊழியர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பானசவாடியைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த்(27), ஷில்பா(27). இவர்கள் இருவரும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு மெஜஸ்டிக்கில் இருந்து கே.ஆர்.சர்க்கிள் நோக்கி பைக்கில் அவர்கள் இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பின்னால் வேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர்கள் இருவர் மீதும் லாரி ஏறியது. அதில் பிரசாந்த், ஷில்பா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரும் பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள மார்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஹலாசூர் கேட் போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரசாந்த், ஷில்பா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். விபத்தில் உயிரிழந்த பிரசாந்த், ஷில்பா உடல்களைப் பார்த்து கதறியழுதனர்.

"விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வேண்டும். எங்களுக்கு நீதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நானும், என் குடும்பத்தினரும் தற்கொலை செய்து கொள்வோம்" என பிரசாந்தின் தந்தை லோகேஷ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "இதே மருத்துவமனையில் தான் என் மகன் பிரசாந்த் பிறந்தான், இப்போது இதே மருத்துவமனையில் இறந்து போய் விட்டான்" என்று அவர் கதறியழுதது காண்போரை கண் கலங்க வைத்தது.

x