திருவேற்காடு: அயனம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை திறந்து 100 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அயனம்பாக்கம் ஈஜிபி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜனார்தனன் (45). இவரது மனைவி கோகிலா (40), மகள் பவதாரிணி. வெளிநாட்டில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்த ஜனார்தனன், ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பியிருந்தார். நேற்று மாலை மனைவி மற்றும் மகளுடன், வீட்டை பூட்டி விட்டு சென்னை அண்ணா நகரில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்தார்.
மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 100 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக இது தொடர்பாக திருவேற்காடு போலீஸாருக்கு ஜனார்தனன் தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சேகரித்தனர். பின்னர் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்றுள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.