திருச்சி: கடனை வசூலிப்பதற்காக ஆயுதங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுற்றித் திரிந்த அதிமுக இளைஞர் பாசறை மாவட்ட தலைவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதே ஊரில் பேராசிரியராக பணியாற்றி வந்த வெங்கடேசன் என்பவர், பள்ளிக் கட்டிடம் ஒன்றை கட்டுவதற்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 35 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை கடனாக கணேசனிடமிருந்து பெற்றுள்ளார். அதில் 5 லட்சம் ரூபாயை மட்டும் வெங்கடேசன் திருப்பிக் கொடுத்த நிலையில், மீதமுள்ள பணத்தை தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கணேசன், தனது உறவினர் முத்தையா என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வெங்கடேசனிடமிருந்து பணத்தை பெறுவதற்காக திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் கரண் என்பவரை கணேசன் நாடியுள்ளார். இதையடுத்து கரண் (22), சிபி ராம் (19), தினேஷ் (33), அருண்குமார் (26), விக்னேஷ் (24) ஆகிய 5 பேர் மூன்று வாகனங்களில் நேற்றிரவு திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையம் அருகே கார் ஒன்றில் ஆயுதங்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த போலீஸார், அந்த வாகனங்களை தணிக்கை செய்த போது, கரணுக்கு சொந்தமான காரில் பெரிய வாள் ஒன்று வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக வெங்கடேசனை தாக்குவதற்காக அவர்கள் காத்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக பார்த்திபன் (30), குமார் என்கிற விஜயகுமார், முத்தையா (45) உள்ளிட்ட மேலும் மூவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.