சிவகங்கை அருகே பாஜக நிர்வாகி படுகொலை: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கட்சியினர் சாலை மறியல்


சிவகங்கை: சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

சிவகங்கை அருகேயுள்ள வேளாங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (52). செங்கல் சூளைநடத்தி வந்த இவர், பாஜக கூட்டுறவுப் பிரிவு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தரசன்கோட்டை அருகே வந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் செல்வக்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில்பலத்த காயமடைந்த அவர், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து திரண்ட வேளாங்குளம் கிராம மக்கள், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தினர். மேலும், உடலை எடுக்க விடாமல் தடுத்து, சிவகங்கை-இளையான்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், செல்வக்குமார் உடல் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக செல்வக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல்சக்தி தலைமையிலான கட்சியினர் மற்றும் செல்வக்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய டிஎஸ்பி சிபிசாய் சவுந்தர்யன், குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது

x