நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்ததாக ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 3 பேர் கைது


சென்னை: கொலை முயற்சியின்போது ஆம்ஸ்ட்ராங் தப்பினால், நாட்டு வெடிகுண்டுகளை வீசி நிலைகுலைய செய்ய, கொலை கும்பல் முடிவு செய்திருந்தது. இந்த நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்த வழக்கில் தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதோடு சேர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலையில் 16 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளை சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிக்கியதால் வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. கொலைக்காக ரூ.1 கோடி வரை பணம் கைமாறிய விவகாரமும் வெளியானது. கொலையாளிகள், பணத்தை கைமாற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் திரை மறைவில் இருந்து மூளையாக செயல்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த உண்மைகளை கண்டறியும் வகையில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய 3 பேரையும் 2-வது முறையாக 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். கொலை நடைபெற்ற பெரம்பூர், புழல் மற்றும் கொலை திட்டம் வகுக்கப்பட்ட இடம் உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீஸார் குழுவாகவும், தனித்தனியாகவும் விசாரித்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உளவாளி பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப் (28) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மேலும் சென்னை கோடம்பாக்கம், பூபதி நகர் 6-வது தெருவைச் சேர்ந்த முகிலன் (32), அதே பகுதி காமராஜர் நகர் 6-வது தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விஜய் (21), அவரது சகோதரர் விக்னேஷ் என்ற அப்பு (27) ஆகிய மேலும் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆம்ஸ்ட்ராங்கை கொலை கும்பல் வெட்டி சாய்க்கும்போது அவர் தப்பினால், நாட்டு வெடிகுண்டுகளை வீசி நிலை குலைய செய்ய கொலை கும்பல் ஆயுதங்களுடன் நாட்டு வெடிகுண்டுகளையும் கூடவே கொண்டு சென்றிருந்தனர்.

அரிவாள் வெட்டில் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்ததால் கொலை கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தாமல் தப்பிஓடியது. பின்னர், அவற்றை வேறு இடங்களில் பதுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கைது செய்யப்பட்ட 3 பேரோடு சேர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது

x