நொய்டா பெண் மருத்துவரிடம் ரூ.59 லட்சம் மோசடி


நொய்டா: நொய்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் பூஜா கோயல். இவருக்கு கடந்த 13-ம் தேதி புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் “நான் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் அதிகாரி. உங்கள் மொபைலை் பயன்படுத்தி ஆபாச படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தவிர, பண மோசடி வழக்குடன் உங்கள் எண் தொடர்பில் இருக்கிறது” என்று பூஜா கோயலிடம் கூறியுள்ளார்.

அப்படி எந்த வீடியோவையும் தான் பகிரவில்லை என்று மருத்துவர் பூஜா பதிலளித்தும், “இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதற்கு நீங்கள் வீடியோ காலில் வர வேண்டும்” என்று அந்த நபர் கூற, மருத்துவர் பூஜா வீடியோ காலில் இணைந்தார். இதையடுத்து, “உங்களை டிஜிட்டல் அரெஸ்ட்செய்துள்ளோம். இந்த வழக்கிலிருந்து நீங்கள் வெளியேற வேண்டுமென்றால் ரூ.59 லட்சத்து 54 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும்” என 48 மணி நேரம் அந்த நபர் மிரட்டியுள்ளார்.

இதனால், பயந்துபோன மருத்துவர் பூஜா, அந்த நபர் கேட்ட தொகையை அவர் குறிப்பிட்ட கணக்குக்கு மாற்றியுள்ளார். இதையடுத்தே வீடியோ காலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதன் பிறகு, அந்த நபர் குறித்து விசாரித்தபோது, அவர் ஒரு மோசடி நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஜூலை 22-ம் தேதி நொய்டா காவல் நிலையத்தில் மருத்துவர் பூஜா புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது

x