விருதுநகர்: விருதுநகர் ஆர்.ஆர். நகரில் 80 பவுன் நகைகள் திருட்டுப் போன வழக்கில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரைத் தேடி விருதுநகர் போலீஸார் மத்தியப்பிரதேசத்தில் முகாமிட்டுள்ளனர்.
விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் தனியார் சிமெண்ட் ஆலையில் துணை பொது மேலாளராகப் பணியாற்றி வருபவர் பாலமுருகன். கடந்த 13-ம் தேதி இவர் வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் 4 பேர் திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
திருட்டு நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது இந்தத் திருட்டில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள் ஈடுபட்டிருப்பது என்பது தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க சிவகாசி ஆய்வாளர் புகழேந்தி தலைமையில் தனிப்படை போலீஸார் மத்தியப்பிரதேசம் சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் தார் மாவட்டம் கிராம்பகோலியைச் சேர்ந்த பார்சிங் அம்லியரா (24) என்பவரை கைது செய்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வச்சக்காரப்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இத்திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை பிடிக்க மற்றொரு தனிப்படை போலீஸார் மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.