சென்னை: பன்னிரெண்டு வருடங்களாக தலைமறைவாக இருந்த, தேடப்பட்டு வந்த ஆயுள் தண்டனைக் கைதி ஒருவரை புனித தோமையார் மலை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கடந்த 1999-ம் ஆண்டு புனித தோமையர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராஜேந்திரன் என்பவரை கொலை செய்தது தொடர்பாக புனித தோமையார்மலை காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் கண்ணன் என்பவர் உட்பட 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவ்வழக்கு விசாரணை முடிவடைந்து, கடந்த 2007 மார்ச், 13 அன்று பூந்தமல்லி, 4-வது விரைவு நீதிமன்றம் குற்றவாளிகள் கண்ணன், ஜூலி, சுனில் மற்றும் அருண் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் புழல் மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ஆயுள்தண்டனை கைதி கண்ணன் கடந்த 2012 ஜனவரி 28-ம் தேதி முதல் 7 நாட்கள் பரோல் அனுமதிக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியில் வந்தார். பரோல் முடிந்து மீண்டும் கண்ணன் சிறைக்கு செல்லாமல் தலைமறைவாகி விட்டார்.
இதனைத் தொடர்ந்து திருமங்கலம் காவல் நிலைய போலீஸார் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்த நிலையில், தலைமறைவு கைதி கண்ணன் குறித்த விவரங்கள் ஏதுவும் கிடைக்கவில்லை.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் நீண்ட நாட்கள் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டதன் பேரில், புனித தோமையார்மலை துணை ஆணையாளர் நேரடி மேற்பார்வையில், புனித தோமையர்மலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன் விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு 12 வருடங்கள் தலைமறைவாக இருந்த தேடப்பட்டு வந்த குற்றவாளி கண்ணனை சனிக்கிழை (ஜுலை 27) கைது செய்தனர்.
கண்ணன் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 26) இரவு குமார் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்றது தொடர்பாக புனித தோமையர்மலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட குற்றவாளி கண்ணன் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
12 வருடங்கள் தலைமறைவாக இருந்த ஆயுள்தண்டனை கைதியை கைது செய்த புனித தோமையர்மலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.