மதுரையில் போலீஸ் விசாரணைக்கு சென்ற ஐடி ஊழியர் மாயம் - பரபரப்பு புகார்


மதுரை: மதுரை தபால்தந்தி நகர் பாமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் கிருஷ்ணக்குமார் (35). இவர், பெங்களூரிலுள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கடந்த 14-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து அவரது தாயார் கஸ்தூரி கலா, தல்லாகுளம் போலீஸில் புகார் அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. எங்களது வீட்டின் அருகே மத்திய குற்றத்தடுப்பு பிரிவில் உதவி ஆணையர் வினோதினி வீடு உள்ளது. எங்களது வீட்டை வினோதினி விலைக்கு கேட்டார். நாங்கள் மறுத்து விட்டோம்.

இதில் இரு குடும்பத்தினர் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டது. எங்கள் வீட்டை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தினோம். இக்கேமராக்கள் தங்களது வீட்டை நோக்கி இருப்பதாக கூறி வினோதினியின் சகோதரி அமுதா, தல்லாகுளம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் எனது மகன் கிருஷ்ணகுமார் விசாரணைக்கு சென்றார். இதன்பின், வீட்டின் மாடியில் வைத்திருந்த சிசிடிவி. கேமராக்களை அகற்றினார். இதற்கிடையில் கடந்த 13-ம் தேதி குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற நிலையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.

மறுநாள் காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணும் ஆஃப் ஆகி உள்ளது என புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக கிருஷணக்குமார் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

x