எஸ்எம்எஸ் அனுப்பி பெண்ணிடம் பண மோசடி: தேனி போலீஸாரிடம் சிக்கிய டெல்லி கும்பல்


தேனி போலீஸில் சிக்கிய டில்லி கும்பல்

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக குறுஞ்செய்தி அனுப்பி பெண்ணிடம் பண மோசடி செய்த டெல்லி கும்பல் ஐந்து பேரை தேனி போலீஸார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் செல்போனுக்கு ஏர்ப்போர்ட்டில் வேலை வேண்டுமா எனக் கேட்டு குறுஞ்செய்தி வந்தது. இதை நம்பி, குறுஞ்செய்தி அனுப்பிய கும்பல் கேட்ட பணத்தை கொடுத்து அப்பெண் ஏமாற்றமடைந்தார். இது குறித்து தேனி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் அப்பெண் புகார் கொடுத்தார். இதனையடுத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் அறிவுறுத்தினர்.

அதன்படி தேனி கூடுதல் எஸ்பி கார்த்திக் (சைபர் க்ரைம்) ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, எஸ்ஐ தாமரைக்கண்ணன் தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். குற்றவாளிகள் டெல்லியில் உள்ளதை மோப்பம் பிடித்த போலீஸார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டது. துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீஸாரை எஸ்பி டோங்ரே பிரவீன் உமேஷ் பாராட்டினார்.

x