மதுரையில் பழிக்குப் பழியாக கொலை செய்யும் நோக்கில் சுற்றிவந்த 8 பேர் கைது


மதுரை: வழிப்பறிகளில் ஈடுபட்டதுடன் பழிக்குப் பழியாக கொலை செய்யும் நோக்கத்துடன் சுற்றி வந்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாநகரில் அவனியாபுரம், அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து கொலை, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. இதையடுத்து, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில், மாநகர காவல்துறையினர் பல்வேறு பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக போலீஸார் மேற்கொண்ட 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையில், மாநகர எல்லையில் பொதுமக்களை அச்சுறுத்தி வழிப்பறி செய்யும் நோக்கத்திலும், பழிக்குப் பழியாக கொலை செய்ய திட்டமிட்டு, வாள், கத்திகளுடன் சுற்றிய 8 பேரை பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் மதுரை வில்லாபுரம் தட்சிணாமூர்த்தி (32), சோலை அழகுபுரம் கண்ணன் (28), சம்மட்டிபுரம் ராம்குமார் (35), பேச்சியம்மன் படித்துறை சந்தோஷ் (22), ஆழ்வார்புரம் மீனாட்சி சுந்தரம் (24), அருள்தாஸ்புரம் தீர்வீன் (20), அனுப்பானடி வினோத்குமார் (26), கே.புதூர் ராஜ் (24) என தெரியவந்தது.

இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில் தெற்கு வாசல், ஜெய்ஹிந்த்புரம், எஸ்.எஸ்.காலனி, திலகர் திடல், செல்லூர், மதிச்சியம், திடீர்நகர், தெப்பக் குளம் போலீஸார் இவர்களை கைது செய்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து கத்தி, வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

x