காரைக்குடி திரையரங்க உரிமையாளர் வீட்டில் 10 ஏசி மெஷின்கள் திருட்டு: இருவர் கைது


காரைக்குடி: சினிமா தியேட்டர் உரிமையாளர் வீட்டில் 10 ஏசி மெஷின்களை திருடி விற்ற இருவரைக் கைது செய்துள்ள போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செக்காலை ரோட்டில் தனியார் திரையங்கம் உள்ளது. அதன் பின்புறம் தியேட்டர் உரிமையாளர் செல்லப்பனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீடு இரண்டு ஆண்டுகளாக பயன்பாடின்றி வீடு பூட்டி கிடந்தது. இந்நிலையில் அந்த வீட்டில் இருந்த 10 ஏசி மெஷின்கள், ஸ்டில் கேமராக்கள் திருடு போய்விட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

இதில், காரைக்குடி கழனிவாசல் புதுரோட்டைச் சேர்ந்த நாகராஜன் (எ) நடுப்பக்கம் நாகராஜ் (19), ஜீவா நகரைச் சேர்ந்த அபிஷேக் (23) ஆகியோர் செல்லப்பன் வீட்டில் இருந்த இந்தப் பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. ஏசி மெஷின் மற்றும் கேமராக்களை உடைத்து அதன் உதிரி பாகங்கள், உலோகப் பொருட்களை பழைய இரும்புக் கடையில் அவ்வப்போது விற்று காசாக்கி உள்ளனர். அதன் மூலம் கிடைத்த பணத்தில் மது அருந்தி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

விசாரணைக்குப் பின் நாகராஜன், அபிஷேக் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து உதிரிப் பாகங்கள், உலோகப் பொருட்களை பறிமுதல் செய்தனர். நாகராஜன் 10 வயது முதலே பல்வேறு இடங்களில் திருடி வந்துள்ளதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

x