வரைபட அனுமதிக்கு ரூ.5,000 லஞ்சம்: விருதுநகர் அருகே ஊராட்சி தலைவர் கைது


விருதுநகர்: ஆர்.ஆர்.நகர் அருகே வரைபட அனுமதிக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துலுக்கப்பட்டி ஊராட்சி தலைவர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், கத்தாலம்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன் (30). 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவருக்கு சொந்தமான மனை ஆர்.ஆர். நகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி கிராமத்தில் உள்ளது. அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி கோரி துலுக்கப்பட்டி ஊராட்சி நிர்வாகத்துக்கு கடந்த 23-ம் தேதி ஆன்லைனில் மணிமாறன் விண்ணப்பித்தார்.

ஆனால், கட்டிட வரைபட அனுமதி கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் துலுக்கப்பட்டி ஊராட்சி தலைவரான நாகராஜை (54) நேற்று நேரில் சந்தித்து இது விஷயமாக மணிமாறன்.பேசி இருக்கிறார். அப்போது, கட்டிட வரைபட அனுமதி வழங்க மணிமாறனிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார் நாகராஜ். அவ்வளவு தொகையை தன்னால் கொடுக்க இயலாது என மணிமாறன் கூறியதால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு ஊராட்சி தலைவர் நாகராஜ் கூறியுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிமாறன், இது குறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலை துலுக்கப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் எஸ்பி- ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் சால்வன் துரை, பூமிநாதன் மற்றும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவுறுத்தல்படி, மணிமாறனிடம் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை, ஊராட்சி தலைவர் நாகராஜ் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

x