காரில் கடத்தப்பட்ட ரூ.30 லட்சம், 502 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல்: மதுராந்தகம் அருகே பரபரப்பு


மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் ரொக்கம் மற்றும் 502 கிராம் தங்கக் கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச் சாவடியில் நேற்று இரவு அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த இரண்டு கார்கள் ஒன்றையொன்று உரசிக்கொண்டன. இதையடுத்து இரண்டு கார்களின் ஓட்டுநர்களும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த போலீஸார், அதில் ஓட்டுநர் ஒருவர் குடிபோதையில் இருந்ததால் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், குடிபோதையில் இருந்த ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்ய ஆய்வாளர் கூறினார். அப்போது, அவரது காரில் இருந்த இன்னொரு நபர் பையை எடுத்துக்கொண்டு தப்பி ஓட முற்பட்டார். உடனே சுதாரித்த போலீஸார், அந்த நபரை விரட்டிப் பிடித்து பையை சோதனையிட்டனர்.

இதில் அந்தப் பையில் ரூ.30 லட்சம் ரொக்கம், 502 கிராம் தங்கக் கட்டிகள் இருந்ததும், பிடிபட்டவர்கள் மரக்காணத்தைச் சேர்ந்த பாரஸ் (38) என்பதும், இவர் மரக்காணத்தில் நகை அடகுக் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, பணத்தையும் தங்கக் கட்டியையும் பறிமுதல் செய்த போலீஸார், பாரஸ், அவருடன் வந்த ஜெகதீஷ் (22), அருள் (22) ஆகிய மூவரையும் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

x