தரங்கம்பாடி கோயிலில் சாமி கும்பிட்டவரை தீவைத்து எரித்துக்கொல்ல முயற்சி: போலீஸார் தீவிர விசாரணை


தரங்கம்பாடி: மயிலாடுதுறை அருகே கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தவர் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தம்பா (எ) அருண்(42). வாடகை பாத்திரக் கடை ஒன்றை நடத்தி வரும் இவர், ஜோசியராகவும் பணி செய்து வந்துள்ளார். மேலும் ரோட்டரி சங்க தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார். இவர் தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள பழமையான மாசிலாமணிநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை சென்றிருந்தார்.

வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்திருந்தனர். கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த கோயிலில், தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு சென்று தம்பா சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர், மேலே இருந்து இவர் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதில், உடலில் தீப்பற்றி அலறி துடித்த தம்பாவை, கோயிலில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். பின்னர் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொறையார் போலீஸார், முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதா? அல்லது தொழில்முறை போட்டியால் நடைபெற்றதா? என்கிற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தவரை எரித்துக் கொலை செய்ய முயற்சி நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x