ஈரோடு: கள்ளநோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட குடும்பம் கைது - அதிர்ச்சியில் வியாபாரிகள்


ஈரோடு: கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லா என்பவர், சுற்றுவட்டார பகுதிகளில் சந்தைகளுக்கு சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். திங்களூர் சந்தையில் அவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு நபர் 500 ரூபாய் பணம் கொடுத்து 100 ரூபாய் மதிப்பிலான காய்கறிகளை வாங்கிவிட்டு, மீதம் 400 ரூபாயை வாங்கிச் சென்றுள்ளார். அந்த 500 ரூபாய் நோட்டை பார்த்தபோது வித்தியாசமாக இருந்ததால், சந்தேகம் அடைந்த ஸ்டெல்லா அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அப்போது அந்த நபர், அதேபோல அருகில் இருந்த பழக்கடை ஒன்றில் 500 ரூபாய் நோட்டை கொடுத்து 100 ரூபாய்க்கு பழங்கள் வாங்கிவிட்டு மீதி பணத்தை வாங்கிச் சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது இரண்டு நோட்டுகளும் ஒரே போல் வித்தியாசமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பின் தொடர்ந்து சென்ற போது அவர்கள் கார் ஒன்றில் ஏறி அங்கிருந்து அவசரமாக கிளம்பிச் சென்றுள்ளனர். அந்த நோட்டு கள்ள நோட்டாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் ஸ்டெல்லா உள்ளிட்ட கடை உரிமையாளர்கள் திங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், எல்லாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வில்லியம்புதூரை சேர்ந்த ஜெயராஜ் (40) என்பவர் அவ்வழியாக வந்துள்ளார். அவரைப் பிடித்து சோதனை நடத்திய போது, அவரிடம் கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது, அங்கு 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அவர் குடும்பத்துடன் சேர்ந்து தயாரித்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஜெயராஜின் பெற்றோர்கள் ஜெயபால், சரசு மற்றும் மேரி மிஸ்டில்லா ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு கலர் ஜெராக்ஸ் மிஷின்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

x