கூலிப்படையை ஏவி ரவுடி கொலை: குற்றவாளிகளைக் காட்டிக்கொடுத்த டாட்டூ


மும்பை: ஸ்பாவில் கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடலில் குத்தப்பட்ட டாட்டூவை வைத்து குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் குரு வாக்மரே(48). தகவல் உரிமை ஆர்வலர் என்று சொல்லப்படும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடியான இவர் ஜூலை 24-ம் தேதி மும்பையின் வோர்லியில் உள்ள சாஃப்ட் டச் ஸ்பாவில் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கொலை செய்யப்படுவதற்கு முன்பு குரு வாக்மரே தனது தொடையில் 27 பேரின் பெயர்களைப் டாட்டூ குத்தியிருந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திய போது பல குற்றவாளிகள் சிக்கினர். இதனையடுத்து ஸ்பா உரிமையாளர் சந்தோஷ் ஷெரேகர் மற்றும் மூன்று குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். குரு வாக்மரே ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியானது.

ஸ்பா உரிமையாளர் சந்தோஷ் ஷெரேக்கரை பணம் கேட்டு குரு வாக்மரே மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சந்தோஷ், குருவை கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக மும்பையியில் நல்லசோபாராவைச் சேர்ந்த முகமது பெரோஸ் அன்சாரியிடம் 6 லட்ச ரூபாயை சந்தோஷ் ஷெரேக்கர் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு மும்பையில் நல்லசோபாரா அருகே முகமது பெரோஸ் அன்சாரிக்குச் சொந்தமான ஸ்பா குரு வாக்மரேவின் புகாரால் மூடப்பட்டது. இதனால் அன்சாரி மேலும் சிலருடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்படுவதற்கு முன்பு குற்றவாளிகள் பெயரை டாட்டூ குத்திய குரு வாக்மரேயின் செயலால், அவரை கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x