நாய் இறைச்சி கடத்துவதாக புகார்: ரயில் நிலையத்தில் இந்து அமைப்பின் தலைவர் கைது


பெங்களூரு: ராஜஸ்தானில் இருந்து பெங்களூருவிற்கு நாய் இறைச்சி கடத்தப்பட்டதாக ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய இந்து அமைப்பின் தலைவர் புனித் கெரேஹள்ளி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து நேற்று இரவு 4,500 கிலோ இறைச்சி அடங்கிய 50-க்கும் மேற்பட்ட பெட்டிகள் பெங்களூரில் உள்ள சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்திற்கு வந்தன. அப்போது அந்த ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலக்கப்பட்டதாக இந்து அமைப்பின் தலைவர் புனித் கெரேஹள்ளி மற்றும் அவரது ஆதரவாளரகள் தடுத்து நிறுத்தி புகார் கூறினர். ஆனால், இந்த இறைச்சிப் பெட்டிகளைக் கொண்டு வந்த அப்துல் ரசாக், புனித் கெரேஹள்ளியின் குற்றச்சாட்டை மறுத்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது இறைச்சிப் பெட்டிகளை எடுத்துச் செல்லவிடாமல் புனித் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் தலையிட்டும் புனித் கெரேஹள்ளி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து காவல் துறை பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் நள்ளிரவு 12 மணியளவில் புனித் கெரேஹள்ளி கைது செய்யப்பட்டு பருத்திப்பேட்டை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு உறங்கிக் கொண்டிருந்த புனித் கெரேஹள்ளிக்கு அதிகாலை 4:45 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கேசி பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், விக்டோரியா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். புனித் களைத்துப்போய் காவல் நிலையத்தில் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

x