குடிபோதையில் போலீஸ்காரரின் காதைக் கடித்த இருவரை போலீஸார் கைது செய்தனர். மதுபோதையில் அரசு பேருந்தை நிறுத்தி தகராறு செய்ததை காவலர் தட்டிக் கேட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
சேலம் மாவட்டம், ஆண்டிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் இருசப்பன்(36) இவர் மேட்டூர் காவல் நிலையத்தில் காவலராக உள்ளார். இவர் தன் ஊரில் இருந்து மேட்டூர் நோக்கி இரவுப்பணிக்காக காவல் நிலையம் சென்று கொண்டு இருந்தார். மங்கனூர் கல்லூரி அருகில் சென்றபோது அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தி போதையில் இருவர் தகராறு செய்து கொண்டு இருந்தனர். காவலர் இருசப்பன் அவர்களிடம் இதுகுறித்துக் கேட்டார். உடனே அவரைக் கல்லால் தாக்கி, இருவரும் சேர்ந்து அவரது காதையும் கடித்தனர்.
காதில் ரத்தம் சொட்டிய நிலையில் இதுகுறித்து இருசப்பன் கருமலை கூடல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்தியது தானம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துராஜ், சிவசக்தி என தெரியவந்தது. கட்டிடத் தொழிலாளியான இவர்கள் இருவரும் மற்றவர்கள் தங்களைப் பார்த்து அச்சப்பட வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்துள்ளனர். போலீஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.