காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே திருமுக்கூடல் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டுமனைப் பட்டாவை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வதற்காக ரூ.20 ஆயிரம் வஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் நேற்று கைது செய்யப்பட்டார்.
உத்திரமேரூரை அடுத்த திருமுக்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குமரவேல்(31). இவர் தனது வீட்டுமனைப் பட்டாவை ஆன்-லைனில் பதிவேற்றுவதற்காக திருமுக்கூடல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் கருணாகரனிடம் சென்றார்.
அப்போது கருணாகரன் பட்டாவை ஆன்லைனில் ஏற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. இது குறித்து விவசாயி குமரவேல் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயி குமரவேலிடம் கொடுத்து அவற்றை கருணாகரனுக்கு வழங்கும்படி அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கருணாகரனை அருங்குன்றம் சாலைக்கு வரவழைத்து இந்த ரூபாய் நோட்டுகளை குமரவேல் கொடுத்துள்ளார். கருணாகரன் அந்தப் பணத்தை வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கைது செய்தனர்.