ஆம்ஸ்டிராங் கொலை வழக்கு: ஆற்காடு சுரேஷின் உறவினர் கைது


சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆற்காடு சுரேஷ் உறவினர் பிரதீப் என்பவரை போலீஸார் இன்று கைது செய்துள்ள நிலையில், இவ்வழக்கின் கைது எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ரவுடிகள் பொன்னை பாலு, அருள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாஜகவை சேர்ந்த அஞ்சலை, அதிமுகவை சேர்ந்த மலர்கொடி உள்ளிட்ட மேலும் சிலரும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது வரை இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரை கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரவுடி சம்போ செந்தில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தற்போது மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், இவர் ஆற்காடு சுரேஷின் உறவினர் என கூறப்படுகிறது. இவ்வழக்கில் இவருடன் சேர்த்து 18 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x