மத்தியப் பிரதேசத்தில் சோகம்: கிணற்றில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு


கட்னி: மத்தியப் பிரதேச மாநிலம், கட்னி அருகே கிணற்றில் விஷ வாயு தாக்கி அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், கட்னி அருகே உள்ள ஜூலா - ஜூலி கிராமம். இங்குள்ள ஒரு கிணற்றிலிருந்து வெளியேறிய விஷ வாயுவை சுவாசித்த 4 பேர் நேற்று மாலை உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவரான ராம் பாய்யா துபே (36), தண்ணீர் குழாய் பொருத்துவதற்காக கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அதைத் தொடர்ந்து அவரது மருமகனும் கிணற்றுக்குள் இறங்கினார். அவர்கள் இருவரும் வெளியே வராததைத் தொடர்ந்து தொழிலாளி ராஜேஷ் குஷ்வாஹா (30), பின்டூ குஷ்வாஹா ஆகியோர் கிணற்றின் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு அடுத்தடுத்து உள்ளே இறங்கினர். இந்நிலையில் கிணற்றுக்குள் இறங்கிய நால்வரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து, அப்பகுதியினர் சந்தேகமடைந்து இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கலெக்டர் திலீப் யாதவ், காவல் கண்காணிப்பாளர் அபிஜித் ரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இதைத் தொடர்ந்து உமரியா மாவட்டத்திலிருந்து சுரங்க நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு, இன்று அதிகாலை, கிணற்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x