கொலை வழக்கு: பெண் காவல் ஆய்வாளருக்கு நிபந்தனை ஜாமீன்!


மதுரை: முன்விரோதத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் காவல் ஆய்வாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. அப்போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ராமர் என்பவர் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி, ராம்குமார், ராஜேந்திரன், இரு பெண்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த ராம்குமார் மற்றும் மேலும் ஒரு பெண்ணை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், பெங்களூரில் மறைந்திருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அப்போது கைதான பெண் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சத்தியசீலா என்பது தெரியவந்தது. இதையடுத்து சத்தியசீலாவை இடைநீக்கம் செய்து இராமநாதபுரம் சரக டிஐஜி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சத்தியசீலா தரப்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்த மனுவை ஜாமீன் மனுவாக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இடம் பெறவில்லை எனவும், பின்னர் தனது பெயரை சேர்த்துள்ளதாகவும், கொலை சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் சத்தியசீலா தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் சத்தியசீலா தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். புதுக்கோட்டையில் போக்சோ வழக்கில் தொடர்புடையவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சத்தியசீலாவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த வாரம் ஜாமீன் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

x