வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய காவலர், ஊர்க்காவல் படை வீரர் சஸ்பெண்ட் - வேலூர் எஸ்பி அதிரடி


வேலூர்: பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துபோது வாகன ஓட்டிகளிடம் கையூட்டு பெற்றதாக காவலர், ஊர்க்காவல் படை வீரர் ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி வழியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இது முக்கிய தேசிய நெடுஞ்சாலை என்பதால் இங்கு காவல் துறையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இந்த சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக அதிகளவில் கடத்தப்படுவதாக தகவல் உண்டு. இதை உறுதிசெய்யும் விதமாக அடிக்கடி பள்ளிகொண்டா சோதனைச் சாவடிகளில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பள்ளிகொண்டா காவல் நிலைய காவலர் சங்கர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நவீன் ஆகியோர் நேற்று (ஜூலை 25) இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் வாகனங்களைச் சோதனை செய்யாமல், வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் இன்று (ஜூலை 26) வேகமாக பரவியது. இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், காவலர் சங்கர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நவீன் ஆகியோர் காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

x