பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்த பணியாளர்: கடலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்


கடலூர்: கடலூரில் மனித கழிவுகளை சுத்தம் செய்ய பாதாள சாக்கடைக்குள் பணியாளர் ஒருவர் இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 45 வார்டுகளில் 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பாதாள சாக்கடைகளில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலைகளில் வெளியேறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இது போன்ற சமயங்களில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பை சுத்தம் செய்ய வாகனங்கள் மற்றும் அதனை இயக்கும் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால், அடிக்கடி இந்த பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சிக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் வாகனத்திற்கு பதிலாக அங்கு வந்த மேற்பார்வையாளர் ஒருவர், தற்காலிக ஒப்பந்த பணியாளர் ஒருவரை சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் அந்த பணியாளர் எவ்விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, அந்த சாக்கடை குழிக்குள் இறங்கி தனது கைகளால் சாக்கடையை சுத்தம் செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் இதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்தனர்.

மனித கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதை உச்ச நீதிமன்றமே தடை செய்துள்ள நிலையில், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் இந்த பணியில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகமும், மனித உரிமைகள் அமைப்பும், தூய்மைப்பணியாளர்கள் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x