அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது


அலிகர்: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக (ஏஎம்யு) வளாகத்தில் இரு ஊழியர்கள் மீது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், பல்கலைக்கழக ஊழியர்கள் இருவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பல்கலைக்கழக ஊழியர்களான முகமது நதீம், கலீம் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறுகையில், படுகாயமடைந்த இருவரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர்களை தடுத்து நிறுத்தி துப்பாக்கியால் சுட்டனர். இதில் முகமது நதீமும், கலீமும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர்.

பின்னர் அவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "பல்கலைக்கழக வளாகத்துக்குள் 4 முதல் 5 சுற்று துப்பாக்கிச் சூடு நடந்தது” என தெரிவித்தனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணை தகவல்படி, இந்த தாக்குதலுக்கு காரணம் முன் விரோதம் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த முகமது நதீமின் மனைவி கூறுகையில், "துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள். எங்களின் 13 வயது மகளிடம் தவறாக நடந்து கொண்டதால், காவல் துறையில் அளித்த புகாரின்பேரில் அவர்கள் மீது ஏற்கெனவே போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

x