ஓட்டுநரை கட்டிவைத்து சரமாரியாக தாக்கிய பேருந்து உரிமையாளர்: அதிர வைக்கும் வீடியோ


மதுரை: ஆம்னி பேருந்தில் உரிமையாளருக்கு தெரியாமல் பயணிகளை ஏற்றி சென்று பண மோசடியில் ஈடுபட்டு வந்த ஓட்டுநர் ஒருவரை, பேருந்தின் உரிமையாளர் பேருந்து நிலையத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை-நாகர்கோவில் இடையே தனியார் ஆம்னி பேருந்து ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆம்னி பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர், நிறுவனத்திற்கு தெரியாமல் பயணிகளை ஏற்றிச்சென்று பண மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பணமோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் அந்த ஓட்டுநரை, மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் பேருந்து நிறுவனத்தின் ஜன்னலில் கயிறு கொண்டு கட்டி வைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பேருந்து நிறுவன அலுவலர்கள் விசாரணை நடத்துவது போல் அவரை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுநரின் கைகளை ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்து நீண்ட நேரம் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து, மனித உரிமை ஆணையம் மற்றும் தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x