ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; நூலிழையில் போலீஸாரிடமிருந்து தப்பியோடிய ரவுடி சீசிங் ராஜா


சென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா, ஆந்திராவில் தனிப்படை போலீஸாரிடமிருந்து நூலிழையில் தப்பியோடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்து வந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரவுடிகள் பொன்னை பாலு, அருள் உள்ளிட்ட 16 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் மரணத்திற்கு பழிவாங்க, இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு ரவுடிக் குழுக்கள் ஒன்றாக இணைந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, உள்ளிட்ட 11 பேர் போலீஸ் காவலில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது, திருவேங்கடம் என்ற ரவுடி தப்பிச் செல்ல முயன்றதால் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இதனிடையே அதிமுகவை சேர்ந்த மலர்கொடி, பாஜகவை சேர்ந்த அஞ்சலை, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், திமுக நிர்வாகியின் மகனான சதீஷ், அதிமுகவை சேர்ந்த ஹரிதரன் உள்ளிட்ட பலரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் ரவுடிகள் சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள இந்த இருவரையும் கைது செய்வதற்கு 5 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சீசிங் ராஜா ஆந்திராவில் உள்ள தனது 2வது மனைவியின் வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் இன்று ஆந்திராவிற்கு சென்று, சீசிங் ராஜாவை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீஸ் வருவதை அறிந்த சீசிங் ராஜா, நூலிழையில் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தப்பியோடிய சீசிங் ராஜாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

x