கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல்: திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு


திருச்சி: விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற 6.86 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்துள்ள சுங்கவரித்துறையினர், பெண் பயணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பயணிக்கும் பயணிகளை தீவிரமாக சோதனை செய்து பின்னர் சுங்கவரித்துறையினர் அனுமதித்து வருகின்றனர். அவ்வப்போது வெளிநாடு செல்லும் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகள் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவற்றை சுங்கவரித்துறையினரும் தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் பயணிப்பதற்காக பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தனர். இதில் பெண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரது உடைமைகளை சுங்கவரித் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் கட்டு கட்டாக 8,000 அமெரிக்க டாலர்கள் இருந்தது தெரியவந்தது. அதன் இந்திய மதிப்பு 6.86 லட்சம் ரூபாய் ஆகும். உரிய ஆவணங்கள் இன்றி இவற்றை எடுத்து செல்ல முயன்றதாக அவற்றை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள், அந்தப் பெண் பயணியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் சிங்கப்பூர் விமானத்தில் பயணிக்க இருந்த பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்த போது, அதில் யூரோ மற்றும் ஜப்பான் நாட்டின் யென் ஆகிய ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் இந்திய மதிப்பு சுமார் 10.33 லட்சம் ரூபாய் ஆகும். இதையடுத்து அவரையும் கைது செய்துள்ள சுங்கவரித்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x